`தமிழகத்தையே மிரட்டுகிறாரா தமிழிசை?’

0
15

காவிரி மேலாண்மை வாரியத்துக்கான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய  நடிகர் சத்யராஜின் பேச்சுக்குப் பதில் கருத்துச் சொன்னதன் மூலம் அரசியல் களத்தில் அனலை மூட்டியுள்ளார் பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன். காவிரி மேலாண்மை வாரிய போராட்டத்தைவிட தமிழிசை செளந்தரராஜன் – சத்யராஜ் கருத்து மோதல் வலுக்கத் தொடங்கியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இது, விவசாயிகளுக்கான  போராட்டமாகக் கருதப்படாமல், தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் வயிற்றுக்கான போராட்டமாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், திரைப்பட நடிகர்கள் சங்கம் சார்பில் நேற்று (ஏப்ரல் 8) அறவழிப் போராட்டம் நடைபெற்றது. இதில், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள்  பங்கேற்றுப் பேசினர். அதில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ், “ராணுவமே வந்தாலும் அஞ்சவேண்டாம். அனைவரும் ஒற்றுமையாகப் போராடுவோம்” என்றார். அவருடைய இந்தப் பேச்சுக்கு தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “இந்திரா காந்தி போன்று அவசரநிலைப் பிரகடனப்படுத்திக் கழுத்தை மோடி நெரிக்கமாட்டார் என்று நினைக்கிறீர்கள். அதில், ஒரு நடிகர் சொல்கிறார், `ராணுவமே வந்தாலும் நாங்கள் பயப்படமாட்டோம்’ என்று… ஆனால், ஐ.டி. ரெய்டு  வந்தால் நீங்கள்  அரசியல் தலைவர்கள்எப்படிப் பயப்படுவீர்கள் என்று எங்களுக்குத் தெரியாதா?” என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார். அவருடைய இந்தக் கருத்துக்கு சத்யராஜ் பதில் அளித்துள்ளார். அதில் “நான் நேர்மையாக வரிகட்டுகிறேன். அதனால், நான் யாருக்கும் பயப்படவில்லை. அதேபோன்று, அப்பா நடிகரான என்னைப் பார்த்து தமிழிசை செளந்தரராஜன் பயப்படத்தேவை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இருவருக்கும் கருத்து மோதல் வலுத்துவரும் நிலையில், அரசியல் தலைவர்கள் சிலரிடம் பேசினோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான இரா.முத்தரசன்,  “அரசியல்ரீதியாகப் பலமில்லாதவர்கள்தான் இப்படியான ஜி.ராமகிருஷ்ணன், சிஎபி எம் வேலைகளைச் செய்வார்கள். பி.ஜே.பி-யின் அடிப்படை, மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதன் காரணமாகவே பி.ஜே.பி பல்வேறு பிரச்னைகளைத் தமிழகத்தில் ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக,  தமிழகத்தில் அந்தக் கட்சிமீது மக்கள் மிகுந்த வெறுப்புடன் உள்ளனர். அதையெல்லாம் முறியடிக்க இப்படியான நடவடிக்கைகளை அந்தக் கட்சி மேற்கொண்டுள்ளது. இதுவரை  நடந்த வருமானவரிச் சோதனைகளே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. கருத்தியல்ரீதியாக அரசியல் செய்யாமல் சத்யராஜை மிரட்டும் தொணியில் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. சத்யராஜ் பேசியது, அவருடைய சொந்தப் பிரச்னைக்காக அல்ல… அவர், ஒட்டுமொத்தத்  தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்துப் பேசியுள்ளார். பி.ஜே.பி-யின்  மாநிலத் தலைவர் என்ற முறையில் அதனை  ஆரோக்கியமாக எதிர்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாமல் மிரட்டுவது போன்று பேசுவது அரசியல் நாகரிகம் அல்ல” என்றார்.

ஆர்.எஸ்.பாரதி தி.மு.க மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், “தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அனைத்துத் தரப்பினரும் போராடி வருகின்றனர். அதனை அரசியல்ரீதியாக எதிர்கொள்ளாமல் பொருந்தாத கருத்துகளைத் தெரிவித்துவருகிறார், தமிழிசை. தமிழகத்தில் பி.ஜே.பி மிக மோசமாக அடி வாங்கிக்கொண்டு வருகிறது. அதன் காரணமாக, மிரட்டி வருகிறது. `வருமானவரித் துறை வரும்’ என்று பேசிய தமிழிசையின் பேச்சுக்கு சத்யராஜ் சரியான பதிலைக் கொடுத்துள்ளார். இதுவே, ஒட்டுமொத்த மக்களின் பதிலும்கூட” என்றார்.

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “பொதுவாக மத்திய அரசு, வருமானவரித் துறை சோதனையை அதற்குச் சாதகமாகப் பயன்படுத்திவருகிறது. இப்படியான சூழலில் தற்போது பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேசியிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிரட்டுவதுபோன்று உள்ளது.மேலும், மற்றொரு விஷயமும் இதன்மூலம் உறுதியாகியுள்ளது. வருமானவரித் துறை சோதனை என்பது உண்மையாக,நேர்மையாக நடைபெறவில்லை என்று தெரிகிறது. எதிர்க்கட்சிகளை மிரட்டவே இப்படியான நடவடிக்கைளை பி.ஜே.பி. மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல… இந்தியா முழுவதும் இப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் மோடி. அவருடைய இந்த எம்ர்ஜென்சி ஆட்சிக்கு விரைவில் மக்கள்  முடிவு கட்டுவார்கள்”  என்றார்.

Related Video


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here