நாள் முழுக்க நாற்காலியில் உட்கார்ந்திருக்கீங்களா… ரிஸ்க் பாஸ்!

0
20
Want create site? Find Free WordPress Themes and plugins.

ணவு, உடை, வாழ்க்கை முறை அனைத்திலும் இன்றைக்கு அசாத்தியமான மாற்றம்! நம் பாரம்பர்ய வாழ்க்கை முறையை மெள்ள மெள்ளத் தொலைத்துவருகிறோம். கேட்டால், `இதாம்ப்பா ட்ரெண்ட்’ என்கிறார்கள். நம் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றத்துக்கும் நம் உடல் ஆரோக்கியத்துக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. அவற்றில் நாம் உட்காரும் முறையும் நாற்காலியும்கூட நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நம்பித்தான் ஆக வேண்டும்.

தொழில்நுட்ப வளர்ச்சி உச்சம் தொட்டிருக்கும் இந்தக் காலத்தில், உடல் உழைப்பு என்றால் என்ன என்பதே தெரியாதவர்கள் அதிகமாகிவிட்டார்கள். அதன் காரணமாகவே ஆரோக்கியக் குறைபாடு என்னும் அவலத்துக்குள்ளாகிறார்கள். வேலை முடிந்து அலுத்து, களைத்துபோய் வரும் யாராக இருந்தாலும் வீட்டுக்குள் நுழைந்தவுடன் சொல்கிற வார்த்தை… `ஷ்ஷ்ஷ்… ஷப்பா…’  பிறகு அவர்கள் தங்களைச் சாய்த்துக்கொள்வது நாற்காலியில்! கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தால், அவர்களின் களைப்புக்குக் காரணமே ஒரே இடத்தில், நீண்ட நேரமாக நாற்காலியில் உட்கார்ந்து வேலை செய்ததாகத்தான் இருக்கும். உடலுழைப்புத் தந்து செய்யும் வேலைகளைவிட, ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலைகளால்தான் நமது உடல் அதிகமாகச் சோர்வடைகிறது.

சாப்பிட, தூங்க, டி.வி பார்க்க, அன்பானவர்களுடன் அமர்ந்து பேச… என எல்லாவற்றுக்கும் நாம் பயன்படுத்துவது நாற்காலியைத்தான். நம் பாட்டிமார்கள் இருக்கும் வீடுகளில் நடைமுறை வேறாக இருக்கும். வயலோ, ஆபிஸ் வேலையோ… வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே இப்படிச் சொல்வார்கள்… ‘வந்தவுடனே சோபா மேல சாயாதே… கீழே காலை நீட்டி உட்காரு…’ இது போன்ற பாட்டிகளின் அறிவுரை கிடைக்காததால்தான் நாற்காலியால் நமக்கு ஏற்படும் பிரச்னைகளை அறியாமலிருக்கிறோம்.

மேற்கத்திய நாகரிகம் நம்மிடம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் கொஞ்ச நஞ்சமல்ல. முக்கியமாக நம்மில் பலரின் வாழ்வே நாற்காலியில்தான் கழிகிறது. படிப்பு, சாப்பாடு, எழுதுவது, ஏன்… சிலர் உறங்குவதற்குக்கூட நாற்காலியையே பயன்படுத்துகிறார்கள். நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்திருப்பதால் நமக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து விளக்குகிறார் எலும்பு மூட்டு நிபுணர், செந்தில் வேலன்…

“முன்பெல்லாம் 50 வயதுகளில்தான் மூட்டுத் தேய்மானம் ஏற்படும். இப்போது, உடல் உழைப்பு குறைந்துவிட்டதால், உடல் உறுப்புகளின் சீரான செயல்பாடு இல்லாமல் போகிறது. அது, மூட்டுத் தேய்மானத்துக்கு வழிவகுக்கும். நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்திருப்பதால், நமது கால்களிலேயே ரத்தம் தங்கிவிடும். உடலுக்குத் தேவையான ரத்த ஓட்டம் நிகழாமல் போய்விடும்.

உடலின் வளர் சிதை மாற்றத்தில் குறைபாடு ஏற்படும்போது, நாம் சாப்பிடும் உணவே எனர்ஜியாக மாறாது, கொழுப்பாக மாறி உடலிலேயே தங்கிவிடும். இதன் காரணமாக உடல் பருமன் அதிகரிக்கும். உடல் பருமன் ஏற்பட்டால், மெள்ள மெள்ள ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு கூடுதல் என வேறு பல பிரச்னைகள் ஏற்படும். இது பல தொற்றா நோய்களுக்கு வழிவகுக்கும்.

சில பொருள்களைச் சில நாள்களுக்கு உபயோகிக்காமலிருந்தால், அவை பயனற்றுப்போகும். இது உடல் உறுப்புகளுக்கும் பொருந்தும். நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்திருப்பதால் சில உறுப்புகளின் செயல்பாடு உடலுக்குத் தேவைப்படாமல் போய்விடும்.

இப்படி அந்த உறுப்புகள் தொடர்ந்து செயல்படாமலிருந்தால் காலப்போக்கில் அவற்றின் செயல்திறன் குறைந்துவிடும். கால், வயிறு மற்றும் தசைகளில் செயல்கள் நடைபெறாமல் நின்று போகும். நாளாக, ஆக பல நோய்கள் ஏற்பட இதுவும் காரணமாகிவிடும்.

நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்திருந்தால், கால்களிலேயே ரத்தம் தங்கிவிடும். இந்த ரத்தம், கால்களில் உள்ள தசைகளின் இயக்கத்தால் அழுத்தம் பெற்று, இதயத்தை நோக்கிச் செலுத்தப்படும். ரத்த ஓட்டம் தேங்கி இருப்பதால், மூளைக்கும் இதயத்துக்கும் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். இதனால், கால், மூளை, இதயம் போன்ற பகுதிகளில் உள்ள ரத்தக்குழாய்களில் கட்டிகள் உண்டாக வாய்ப்பு உண்டு. ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புக்கூட உண்டு.

நோய்கள்

நாம் நாற்காலியில் அமர்ந்திருக்கும் நிலை சரியானதாக இல்லையென்றால், கை, கால், கழுத்து, தோள்பட்டை, முதுகு போன்ற பகுதிகளில் வலியை ஏற்படுத்தும். குறிப்பாக, ஐடி மற்றும் கணினித் துறையில் பணிபுரிபவர்கள் கம்ப்யூட்டரைப் பார்க்கும் கோணம் மாறுபடும்.

முறையற்ற போஸ்சரில் (Posture) அமர்ந்து வேலை செய்வதால், மூட்டு எலும்புகளில் வலி உண்டாகும். இது கொஞ்சம் கொஞ்சமாக எலும்புத் தேய்மானத்தையும் உண்டாக்கும். நரம்புகளில் அழுத்தம், தண்டுவடத்தில் ஏற்படும் பிரச்னை போன்றவைதான் நீண்ட நேரம் அமர்ந்திருந்து, எழுந்து நடக்க முயலும்போது கால்களில் தசைப் பிடிப்பு, நரம்புப் பிடிப்பு போன்றவை ஏற்படுவதற்குக் காரணங்கள்.

நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால், உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல… மன ஆரோக்கியமும் பாதிக்கப்படும். நினைவாற்றல் இழப்பு, வெற்று எண்ணம், கவனக்குறைபாடு, தன்னைச் சுற்றி நடப்பதை உள்வாங்காமல் இருப்பது, தனிமை, மனஅழுத்தம், மனச் சோர்வு போன்றவை ஏற்படும்.

நீண்ட நேரம் ஏ.சி-க்கு அடியில் நாற்காலியில் அமர்ந்தபடியே வேலை பார்ப்பதால், சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போகும். வைட்டமின் டி மற்றும் இரும்புச்சத்து போன்றவை நம் உடலுக்குக் கிடைக்காது.’’

இது குறித்து பிசியோதெரபிஸ்ட் ரமேஷ் கண்ணனிடம் பேசினோம். “பிசிக்கல் ஹெல்த்தில் மிகவும் முக்கியமானது, ‘மூவ்மென்ட் இஸ் லைஃப் (Movement is Life)’. இயக்கம்தான் வாழ்க்கை. உடலியக்கம் சரியாக இல்லையென்றால் நம்மால் எந்த வேலையையும் செய்ய முடியாது.

இதை நம் முன்னோர்கள் வாழ்க்கையில் ஒரு பழக்கமாகவே கடைபிடித்தார்கள். காலை எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும்வரை அவர்களின் செயல்பாடுகள் அனைத்திலும் உடற்பயிற்சி, ஆரோக்கியம் அனைத்தும் அடங்கி இருக்கும். இன்றைக்கு இந்தப் பழக்கவழக்கங்கள் அனைத்தும் மலையேறிவிட்டன.

உடல் பருமன்

மேற்கத்திய நாகரிகம் என்பது அவர்களுடைய தேவைக்கேற்ப, அவர்கள் வாழும் இடத்தின் தட்பவெப்பநிலை, உணவு முறை, வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, அவர்களின் தினசரி செயல்பாடுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அது எல்லா நாடுகளுக்கும், எல்லோருக்கும், எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தாது.

அமர்ந்திருக்கும்போது இதயத்துடிப்பும் ரத்த ஓட்டமும் குறைய ஆரம்பிக்கும். இதனால், உடலின் வளர் சிதை மாற்றமும் பாதிப்படையும். நாம் நிற்கும்போது எரிக்கப்படும் கலோரி மற்றும் செலவழியும் எனர்ஜியின் அளவைவிட அமர்ந்திருக்கும்போது எரிக்கப்படும் கலோரி மற்றும் எனர்ஜியின் அளவு குறைவாக இருக்கும். அதனால் உட்கொள்ளும் உணவிலுள்ள ஊட்டச்சத்துகளை உடல் கொழுப்பாக எடுத்துக்கொள்ளும். இதனால் உடல் பருமன் அதிகரிக்கும்.

இப்படி ஏற்படும் உடல் பருமனால், உடல் எடையைத் தாங்க முடியாது. முட்டி வலுவிழக்கும். இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். இதன் கூடுதல் பாதிப்பாக எதுக்கலித்தல், நெஞ்செரிச்சல், சிலருக்கு பித்தப்பைக் கற்கள் போன்றவை ஏற்படும்.

பொழுதுபோக்குக்காக மாலை நேரங்களில் நாற்காலியில் அமர்ந்து டி.வி பார்க்கும் பழக்கம், இரவு உணவுக்குப் பின்னும் தொடரும். இதனால் நடைப்பயிற்சி, விளையாட்டு, உடலுழைப்பு போன்றவற்றை மறந்து இயந்திரம்போல ஒரே மாதிரியான தொடர் செயல்களையே செய்துவருகிறோம். இது நம் உடலின் உள் உறுப்புகளையும் பாதிக்கும். உடல் பருமன்அதிகரிப்பதாலும், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதாலும் உடலின் உள் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைய ஆரம்பிக்கும்.

இதனால், கணையத்தில் இன்சுலின் சுரப்பு குறைந்து, டைப் 2 சர்க்கரைநோய்க்கு வழிவகுக்கும். உணவில் உள்ள குளூக்கோஸ் கொழுப்பாக மாறி உடலில் தங்கிவிடும்.

நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் நம்முடைய ஆக்டிவிட்டி லெவல் (Activity level) குறையும். இதனால் உடல் சோம்பலடையும். `நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் முதுகுவலி ஏற்படும்’ என்று சொல்வார்கள்.

உண்மையில், இடுப்புவலிதான் ஏற்படும். உட்கார்ந்திருக்கும்போது நம் உடல் எடை இடுப்புத் தசைகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும். இந்த அழுத்தத்தால், முதுகுத்தண்டு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள தசைகளில் வலி மற்றும் பிடிப்புகள் ஏற்படும். சிலருக்கு சிறுநீரகக் கல்லை உண்டாக்கும்’’ எச்சரிக்கிறார் ரமேஷ் கண்ணன்.

நாற்காலியில் அமர்வதைக் குறைக்க சில வழிமுறைகள்… 

* அலுவலகத்தில் அமர்ந்துதான் வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தாலும், வெளியிடங்களில் நாற்காலியிலமர்ந்து வேலை செய்வதைத் தவிர்க்கலாம்.

* ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் இடையே, இருக்கையைவிட்டு எழுந்து 5 நிமிடங்கள் நடக்கலாம். சூரிய ஒளியில் செல்லும் வாய்ப்பு இருந்தால், சூரிய ஒளி உடலின் மீது படும்படி நடக்கலாம். சூரிய ஒளியில் இருந்து வரும் கதிர்கள் பகலில் உடல் சோர்வால் உண்டாகும் தூக்கத்தை விரட்டும். உடல் செல்கள் புத்துணர்வு பெற உதவும்.

* நாம் அமர்ந்திருக்கும் நாற்காலியை சரியாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. அது, முதுகுத்தண்டுக்குச் சரியாகப் பொருந்தும் அளவுக்குச் சரியான உயரத்தில் இருக்க வேண்டும்.

 

உட்காரும் விதம்

* சாப்பிட்ட பிறகுல் உடனே நாற்காலியில் அமர்ந்து வேலை செய்யக் கூடாது. சில நிமிடங்கள் நிற்கலாம் அல்லது நடக்கலாம். நிற்கும்போதும் நடக்கும்போதும் நம் இதயத்துடிப்பு சீராகவும், அதிகமாகவும் இருக்கும். இதயம், சீரான ரத்த ஓட்டத்துக்கு ஓர் உந்துதலைக் கொடுக்கும். அது வளர் சிதை மாற்றத்துக்கு உதவும்.

* செல்போனில் பேசவேண்டி வந்தால், நடந்துகொண்டே பேசலாம். எழுந்து நடப்பதால், தசைகள் இயக்கம் பெற்றுக் காலில் ரத்தம் தேங்காமல், ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும்.

* நீண்ட நேரம் நாற்காலியில் அசையாமல் அமரந்திருக்கக் கூடாது. அதேபோல், நீண்ட நேரம் அசையாமல் நிற்கவும் கூடாது. இரண்டுமே ஆபத்தானவை.

* அலுவலகங்களில் லிஃப்டுக்குப் பதிலாகப் படிக்கட்டுகளைப் பயன்படுத்தலாம். மற்றவர்களின் கேலிப்பேச்சுகளை மனதில் ஏற்றிக்கொள்ளாமல், லிஃப்ட் இருந்தாலும் படிக்கட்டைப் பயன்படுத்துவது நல்லது.

* வீட்டுக்குள் முடிந்தவரை தரையில் அமர்ந்து வேலைகளைச் செய்யப் பழகலாம். பொருள்களை அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று வாங்கலாம் அல்லது மிதிவண்டியால் செல்லலாம்.

`நீண்ட நேரம் சேரில் அமர்ந்திருப்பது சிகரெட் பிடிப்பதற்கு இணையான தீங்கைத் தரும்’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். ரிலாக்ஸாகச் சேரில் அமர்ந்திருக்கிறீர்களா… அது, ரிஸ்க் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.
Related Video


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here