`கார்த்தியின் விமான டிக்கெட் விலையே நான்கரை லட்ச ரூபாய்!’ – சி.பி.ஐ-க்கு எதிராகச் சீறும் சிதம்பரம் குடும்பம்

0
16
Want create site? Find Free WordPress Themes and plugins.

லண்டனில் தன் மகளின் மேல்படிப்புக்கான இடத்தை உறுதி செய்வதற்காகச் சென்ற கார்த்தி சிதம்பரம், கடந்த 28-ம் தேதி காலை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இறங்கினார். அடுத்த சில நிமிடங்களில் சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டார். ‘என் மகன் மூலமாக என்னை அசிங்கப்படுத்த நினைக்கிறார்கள். அவ்வளவு எளிதில் இந்த விவகாரத்தை விட்டுவிட மாட்டேன்’ எனக் கொந்தளித்திருக்கிறார் ப.சிதம்பரம்.

மத்திய நிதியமைச்சராகப் ப.சிதம்பரம் பதவி வகித்த 2007-ம் ஆண்டில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்குக் கிடைத்த முதலீட்டு தொகையைக் குறைத்துக் காட்டுவதற்கு உதவி செய்த வகையில் 10 லட்ச ரூபாயைக் கார்த்தி பெற்றார் என்பதுதான் சி.பி.ஐ முன்வைக்கும் குற்றச்சாட்டு. அதுவும் அவருடைய அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் நிறுவனம் மூலம் வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றதாகக் கடந்த ஆண்டு சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது.

குறிப்பாக, ரூ.4.62 கோடி மட்டுமே முதலீடு திரட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை மீறி ரூ.305 கோடிக்கு அதிகமாகத் திரட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான வீடு, அலுவலகம், சிதம்பரத்தின் டெல்லி வீடு ஆகியவற்றில் தீவிர தேடுதலை நடத்தியது சி.பி.ஐ. இதன் தொடர்ச்சியாகக் கடந்த மாதம் அமலாக்கத்துறை முன்பாக ஆஜராகி விளக்கமும் அளித்தார் கார்த்தி.

அதேநேரம், கார்த்தியின் ஆடிட்டரான பாஸ்கர் ராமனைக் கைது செய்தது சி.பி.ஐ. இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார் கார்த்தி. இந்த மனு இன்னமும் விசாரணைக்கே வரவில்லை. இந்தச் சூழ்நிலையில், சி.பி.ஐ காவலில் இருக்கும் பாஸ்கர் ராமன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே கார்த்தி கைது செய்யப்பட்டார் என்ற தகவலும் வெளியானது.

லண்டனில் நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்காக மூன்று நாள் பயணத் திட்டத்தை வகுத்துச் சென்ற சிதம்பரம், கார்த்தியின் கைதால் கொதிப்படைந்து, அன்று இரவே சென்னை திரும்பிவிட்டார். ‘அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் ஓர் அங்கமாகக் கார்த்தியைக் கைது செய்திருக்கிறார்கள்.

இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை’ என டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் சிதம்பரம். ‘ஹோலி பண்டிகையின் காரணமாகத் திங்கள்கிழமைதான் நீதிமன்றம் செயல்படும்’ எனக் கூறப்பட்ட தகவலால் மிகவும் நொந்து போய்விட்டார்.

‘சில நாள்களாகச் சிறையில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டே என் மகனைக் கைது செய்திருக்கிறார்கள்’ என ஆதரவாளர்களிடம் கொதிப்புடன் பேசியிருக்கிறார் சிதம்பரம்.

கார்த்தியின் கைது குறித்து நம்மிடம் விவரித்தார் அவரின் ஆதரவாளர் ஒருவர், “நீண்டநாள்களாக இந்த வழக்கு நடந்து ண்டிருக்கிறது. அவர் தொடர்ந்து சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையின் விசாரணைகளை எதிர்கொண்டு வருகிறார். அவரை 22 மணி நேரம் சி.பி.ஐ விசாரித்திருக்கிறது.

`தேடப்படும் குற்றவாளி’ என அறிவித்ததை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். `என்னைத் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்க முடியாது, சி.பி.ஐ, அமலாக்கத்துறை விசாரணையில் ஆஜராகியிருக்கிறேன். நான் வெளிநாடு போவதை ஏன் தடை செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டு, சி.பி.ஐ அறிவித்ததை ரத்து செய்யுமாறு கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கொடுத்த அனுமதியில்தான், அவர் வெளிநாட்டுக்குச் சென்றுவந்தார்.

அப்படியே தப்பிச் சென்றுவிடவில்லையே…

இதுவரையில் அவர்மீது என்ன பிரிவின்கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறார்கள். இப்போதுதான், 10 லட்ச ரூபாய் வாங்கியதற்கான ஆதாரம் கிடைத்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். அதை நீதிமன்றத்தில் சி.பி.ஐ சமர்பித்திருக்கிறதா?

கார்த்தி சிதம்பரத்தின் முன்னாள் ஆடிட்டர்தான் பாஸ்கர் ராமன். அவர் தற்போது அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் இப்போது கார்த்தியின் ஆடிட்டர் கிடையாது.

லஞ்சம் வாங்கியதாகச் சொல்லப்படும் அட்வான்டேஜ் கம்பெனியின் எந்தப் பொறுப்பிலும் கார்த்தி கிடையாது. `இந்திராணி முகர்ஜிக்கு, சிதம்பரத்தின் நிதியமைச்சகம் மூலம் சட்டவிரோதமாக அனுமதி வாங்கிக் கொடுத்தார் கார்த்தி’ என்கிறார்கள். ‘இதற்காகப் 10 லட்சம் கையூட்டு பெற்றார்’ என்கிறார்கள். இப்போது சிதம்பரத்தின் தொடர்பையும் இந்திராணி முகர்ஜி கைகாட்டியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை

மகளைக் கொன்ற வழக்கில் சிறையில் இருக்கும் கொலைக் குற்றவாளியிடம் வாக்குமூலம் பெற்று, அதன்மூலம் கார்த்தியைக் கைது செய்தது எந்தவகையிலும் சரியானதல்ல. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை என்றால், சிதம்பரத்துக்கு கீழ் பணிபுரிந்த நிதித்துறை அமைச்சகச் செயலாளர், கீழ்நிலைச் செயலாளர்களைத் தாண்டி நேரடியாக அமைச்சர் பார்வைக்கு எதுவும் வந்துவிடப்போவதில்லை.

இவர்கள் அனைவரும் பரிசீலித்த பிறகுதான், அந்தப் பேப்பர்கள் அமைச்சரின் மேஜைக்கு வரும். இதுவரையில் நிதித்துறை அமைச்சக அதிகாரிகளிடம் விசாரணை நடந்திருக்கிறதா. அப்படி எதுவுமே நடக்காமல் நேரடியாகக் கைது செய்யப்பட்டிருப்பது பழிவாங்கும் நடவடிக்கை அல்லாமல் வேறென்ன?

தன்னுடைய மகன் கைது செய்யப்பட்டிருப்பதைச் சிதம்பரத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘என் அரசியல் வாழ்வுக்கு என் மகன் மூலமாகக் களங்கத்தை உண்டாக்குகிறார்கள். அவரைக் கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. வீட்டில் சோதனை நடந்தபோதெல்லாம் கைது செய்யவில்லை’ எனக் கொந்தளித்தார். இந்தக் கைதைக் காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

சட்டரீதியாகவே இந்த விவகாரத்தை எதிர்கொள்ள இருக்கின்றனர். சிதம்பரம் குடும்பத்தைப் பொறுத்தவரையில் பத்து லட்ச ரூபாய் என்பது ஒரு விஷயமே அல்ல. லண்டனுக்குக் கார்த்தி சென்றுவந்த டிக்கெட் விலையே நான்கரை லட்ச ரூபாய். இந்த வழக்கும் சாதாரண பெட்டி கேஸ் போலத்தான் முடிவுக்கு வரும்” என்றார்.

‘ஒருநாளில் எந்த வாக்குமூலத்தையும் கார்த்தி சிதம்பரத்திடம் இருந்து பெற முடியவில்லை. மேலும், 14 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும்’ என சி.பி.ஐ கோரிக்கை வைத்திருக்கிறது. பாஸ்கர் ராமனின் வாக்குமூலத்தால் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார் கார்த்தி. சிதம்பரத்துக்கு எதிரான மத்திய அரசின் நெருக்குதல்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.
Related Video


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here